ஊரையெல்லாம் சிரிக்க வைத்த வடிவேலு, இப்போது தாங்க முடியாத சோகத்தில்!

காமெடி என்றால் இன்று கவுண்டமணிக்குப் பிறகு கொடிகட்டிப் பறப்பவர் வடிவேலுதான்.

மனிதர் திரையில் தோன்றினாலே மனசு லேசாகி சிரிக்க ஆரம்பித்துவிடுவோம். ஒரு வெள்ளந்தியான கிராமத்து மனிதராக திரையில் சேட்டைகள் செய்யும் வடிவேலு, கிட்டத்தட்ட நிஜத்திலும் அதே வெள்ளந்தித்தனத்தோடு இருந்து விட்டார்.

அதன் விளைவு பெரும் நஷ்டத்தில் தவிக்கிறார். கூட இருந்த கூட்டாளி நடிகர்களே வடிவேலுவின் அறியாமையைப் பயன்படுத்தி பல கோடி ரூபாயைச் சுருட்டிக் கொண்டு ஓடியிருக்கிறார்கள்.

இதன் விளைவு இன்று கண்ணீரில் தவிக்கிறார் மனிதர்.

இதற்கு முன்பே கூட இதுபற்றி மீடியாவில் பேசிக் கொண்டார்கள் என்றாலும், வருமான வரித்துறையினர் சமீபத்தில் வடிவேலு வீட்டிலும் அலுவலகத்திலும் சோதனை நடத்தியபோதுதான் இந்த விஷயம் வெளியே தெரிய வந்துள்ளது.
வடிவேலுவைச் சுற்றி எப்போதும் துணை காமெடி நடிகர் பட்டாளம் இருக்கும். அவர்களில் சிலர் நெருங்கிய நண்பர்களாகவும் இருந்தனர். இவர்கள் எல்லோருக்குமே வடிவேலு மூலம் தொடர்ந்து வாய்ப்புகள் வந்தன.

அவர்களில் ஒருவர் சொந்தப் படம் எடுத்த போதுகூட, இலவசமாக நடித்துக் கொடுத்து உதவினாராம் வடிவேலு.

வடிவேலு, தனக்கான சம்பளத்தைக் கூட செக்காக வாங்க மாட்டார். பெரும்பாலும் கேஷ்தான். ஒரு கட்டத்தில் கோடி கோடியாய் சம்பாதித்த பணத்தை எங்கு முதலீடு செய்வது என்று புரியாமல் குழம்பிப் போனார். அப்போதுதான் கூட இருந்த சிலர் குழி பறிக்க வியூகம் வகுத்தனர். ரியல் எஸ்டேட்டில் முதலீடு செய்யுமாறு யோசனை சொன்னார்கள்.

நிலம் வாங்கி போட்டால் ஒரு வருடத்திலேயே விலை ஏறும், நல்ல ஆதாயம் கிடைக்கும் என்று ஆசை வார்த்தை கூறினார்கள். அதை நம்பி வடிவேலுவும் நல்ல இடமாகப் பார்க்கச் சொன்னார்.

மோசடி நடிகர்கள் போலி டாக்குமெண்டுகளை தயார் செய்து அரசு புறம்போக்கு நிலங்களை வடிவேலு பெயருக்கு பத்திரம் பதிவு செய்துள்ளனர். உச்சகட்ட ஏமாற்றுத்தனமாக சுடுகாடு அமைக்க அரசு ஒதுக்கிய நிலத்தையும் வடிவேலுவுக்கு வாங்கி கொடுத்துள்ளனர்.

இந்த நிலங்களுக்கு விலையாக ரூ 7 கோடியை வடிவேலுவிடமிருந்து அபகரித்துள்ளனர்.

சில மாதங்கள் கழித்துதான் உண்மை தெரிந்தது வடிவேலுவுக்கு. அதற்குள் ஏமாற்றியவர்கள் வடிவேலுவிடம் இருந்து பி்ரிந்து போய்விட்டனர். வெளியே சொல்ல முடியாமல் மனதுக்குள் வைத்தே அழுத வடிவேலு, போதும்டா சென்னை என்று மதுரைக்கே போய்விட்டார்.

சமீப காலமாக தனது சோகத்தை தன் தாயிடம் சொல்லி கலங்கிய வடிவேலுவை சமாதானப்படுத்தி, இனி மதுரையிலேயே இருந்து கொள் என்று கூறினாராம் தாயார்.

இதுபற்றி வருமான வரி அதிகாரிகளிடம் கூறிய வடிவேலு, என் நண்பர்களை நான் பெரிதும் நம்பினேன். அவர்கள் தாம்பரத்தை சுற்றி உள்ள பகுதிகளில் நிலம் வாங்கித் தந்தனர். பிறகு விசாரித்தபோது அது போலி டாகுமென்ட் என தெரியவந்தது. பேப்பரை வைத்து ஏமாற்றி விட்டனர் என்றாராம்.

வடிவேலுவைத் தொடர்பு கொண்டு இந்த விவரங்களைக் கேட்டபோது, "உண்மைதான்... என்ன பண்றதுன்னே தெரியல" என்றார்.

"கூட இருக்கும் நண்பர்களாச்சேன்னு குருட்டுத்தனமாக நம்பினேன். அவர்கள் மொத்தமாக மோசம் செய்துவிட்டனர். அவர்கள் போலியாக வாங்கி தந்த நிலத்தில் ஒன்று சுடுகாட்டுக்கு ஒதுக்கப்பட்டது.

இதனால் கடந்த சில மாதங்களாக கடும் மன அழுத்தத்துக்கு உள்ளாகி இருக்கிறேன். கஷ்டப்பட்டு சம்பாதித்த காசுல பெருந் தொகையை இழந்து விட்டேன்.

ஒவ்வொரு வரையும் சிரிக்க வைக்கும் நான் திரைக்கு பின்னால் அழுது கொண்டு இருக்கிறேன். நெருக்கமான நண்பர்கள் துரோகம் செய்தால் அதில் ஏற்படும் வலி தாங்க முடியாதுங்க.

திரையில மட்டுமல்ல, நிஜத்திலும் நான் ஒரு கோமாளின்னு மத்தவங்க தப்பா நினைச்சிடக் கூடாதேன்னுதான் வெளிய சொல்லல... நான் அதிகமா படிக்கல. அதனால சொன்னதையெல்லாம் நம்பிட்டேன்..." என்றார் கண்ணீருடன்.

'அதுக்கெல்லாம் நீ சரிப்பட்டு வர மாட்டே' என்று படத்தில் வடிவேலுவைப் பார்த்து வசனம் பேசியவர்கள் இப்போது நிஜத்திலும், வடிவேலுவை அழ வைத்து வேடிக்கை பார்த்துள்ளது திரையுலகை பரபரப்பில் ஆழ்த்தியுள்ளது.

நூறாவது வயதில் காதலை வெளியிட்ட ஆஸ்திரேலிய பாட்டி


ஆஸ்திரேலியாவை சேர்ந்த நூறு வயது பெண் 40 ஆண்டுகளுக்கு முன் விடுக்கப் பட்ட காதல் விண் ணப்பத்தை ஏற்றுக் கொண் டுள்ளார்.ஆஸ்திரேலியாவின் மெல்பர்ன் நகரை சேர்ந்தவர் மய்ரா ஹாரிஸ்.

கடந்த வாரம் இவர் நூறாவது பிறந்த நாளை கொண்டாடினார். தான் வேலை செய்த வின்சர் ஓட்டலிலேயே இந்த பிறந்த நாளை கொண்டாடினார். இவரது பேத்தி திருமணம் 90ம் ஆண்டு இதே ஓட்டலில் நடந்தது. கடந்த 60ம் ஆண்டுகளில் மய்ரா இந்த ஓட்டலில் உள்ள பாரில் பணி புரிந்த போது இவரை விட 30 வயது குறைந்த ஆஸ்திரிய நாட்டை சேர்ந்த நபர், இவரை காதலிப்பதாக கூறினார். ஆனால், அப்போது மய்ரா அந்த நபரின் காதலை ஏற்றுக் கொள்ளவில்லை. இதனால், அந்த நபர் திருமணம் செய்து கொள்ளாமலேயே காலத்தை கழித்து வருகிறார்.

இந்நிலையில், கடந்த வாரம் நூறாவது பிறந்த நாளை கொண்டாடிய மய்ரா திடீரென, அந்த நபரின் காதலை தற்போது ஏற்றுக்கொள்வதாக கூறி கண்ணீர் வடித்தார்.

இதுகுறித்து, மய்ராவின் மகள் குறிப்பிடுகையில்,

" இந்த தள்ளாத வயதில் காதலை பற்றி கூறி பெயரை கெடுத்து கொள்கிறார் என் தாய்' என்றார்.மய்ராவை காதலித்த நபர், இந்த விழாவில் கலந்து கொள்ளவில்லை. ஆஸ்திரியாவில் நோய்வாய்ப்பட்டுள்ள அவரது தாயை கவனித்து வருகிறார். இதனால், அவரால் காதலியின் நூறாவது பிறந்த நாளில் கலந்து கொள்ள முடியவில்லை.

குட்டி : மு‌ன்னோ‌ட்ட‌ம்

தெலுங்கில் வெளியான ஆ‌ரியா படத்தின் தமிழ் ‌‌ரீமேக். தனுஷின் ‌‌ரீமேக் படம் யாரடி நீ மோகினியை இயக்கிய மித்ரன் ஆர் ஜவஹர் இந்தப் படத்தையும் இயக்கியிருக்கிறார்.

ஜெமினி பிலிம் சர்க்கியூட் படத்தை தயா‌ரித்திருக்கிறது. தனுஷின் ஜோடியாக நடித்திருப்பவர் ஸ்ரேயா. கீதா என்ற க‌ல்லூ‌ரி மாணவியாக அவர் நடித்துள்ளார்.

யாரடி நீ மோகினியில் நயன்தாராவை ஹோம்லியாக காண்பித்தது போல் இந்தப் படத்தில் பாவாடை தாவணியில் ஸ்ரேயாவை சில காட்சிகளில்உலவவிட்டிருக்கிறார் இயக்குனர்.

முக்கோண காதல்தான் கதை. கல்லூ‌ரியில் படிக்கும் தனுஷுக்கு ஸ்ரேயா மீது காதல். அவருக்கு வேறொரு இளைஞன் மீது ‌பி‌ரியம். இறுதியில் ஜெயித்தது யார் என்பது கதை. ஸ்ரேயா ஆசைப்படும் இளைஞனாக இந்தி நடிகர் சமீர் தத்தானி நடித்திருக்கிறார்.

மென்மையான காதல் கதையான இதில் வில்லன்கள் என்று யாரும் கிடையாது. தனுஷ், ஸ்ரேயா தொட்டு நடிக்கும் காட்சிகளோ, டூயட்டோ கிடையாது.

தேவிஸ்ரீ பிரசாத் இசையமைக்க விவேகா, தாமரை பாடல் எழுதியுள்ளனர். பாலசுப்ரமணியெம் கேமரா. எடிட்டிங் கோலா பாஸ்கர். சண்டைப் பயிற்சி தளபதி தினேஷ். ஒரு பாடலுக்கு மேக்னா நாயுடு ஆடியிருக்கிறார்.

பொங்கலுக்கு வெளியாகவிருக்கும் இந்தப் படத்துக்கு சென்சார் யு சான்றிதழ் வழங்கியுள்ளது.

தைப்பொங்கல்



தைப்பொங்கல் தை 1 அன்று தமிழர்களால் சிறப்பாக கொண்டாடப்படும் ஒரு தனிப்பெரும் விழா. தமிழர் திருநாளாக தமிழ்நாடு, இலங்கை, மலேசியா, சிங்கப்பூர், ஐரோப்பிய நாடுகள், வட அமெரிக்கா, தென் ஆபிரிக்கா, மொரிசியசு என தமிழர் வாழும் அனைத்து நாடுகளிலும் கொண்டாடப்படுகிறது. இவ்விழா சமயங்கள்கடந்து அனேக தமிழர்களால் கொண்டாடப்படுகிறது. பொங்கல், உழைக்கும் மக்கள் இயற்கைக்கும், மற்ற உயிர்களுக்கும் சொல்லும் ஒரு நன்றியறிதலாக கொண்டாடப்படுகிறது.

தைப்பொங்கல் வரலாறு
சங்ககாலத்தில் அறுவடை காலத்தில் நல்ல மழை பெய்யவும், நாடு செழிக்கவும் பெண்கள் இந்த விரதத்தைக் கடைப்பிடித்தார்கள். தை முதல் தினத்தில் இந்த விரதத்தை முடிப்பார்கள். நல்ல விளைச்சல் கொடுத்தமைக்காக பூமி, சூரியன், உதவிய மாடு போன்றவற்றிற்கு நன்றி தெரிவிக்கும் விதமாக சர்க்கரைப் பொங்கல் படைத்து வழிபட்டனர். இதுவே நாளடைவில் மூன்று தினங்கள் கொண்டாடும் பொங்கல் திருநாள் கொண்டாட்டமாக மாறியது.

உழவர் திருநாள்
பொங்கல் விழா, மக்களால் இயல்பாகக் கொண்டாடப்படுகிறது. உழைக்கும் தமிழ் மக்கள் தாமே கண்டுணர்ந்து, தமது உழைப்பிற்கு உதவிய இயற்கை சக்திகளுக்கும், தம்மோடு சேர்ந்து உழைத்த கால்நடைகளுக்கும், தமது நன்றியையும் மகிழ்ச்சியையும் தெரிவிக்கும் விழா. உழவர்கள் மழையின் உதவியால் ஆடி மாதம் முதல் உழைத்துச் சேர்த்த நெல்லைமார்கழியில் வீட்டிற்குக் கொண்டு வந்து தமது உழைப்பின் பயனை நுகரத் தொடங்கும் நாளே தைப்பொங்கல் ஆகும்.

நான்கு நாள் திருவிழா
பொங்கல் விழா நான்கு நாள் கொண்டாட்டம் ஆகும்.
போகி
பொங்கல் பண்டிகை நான்கு நாள் பண்டிகையாகும். [மார்கழி] கடைசி நாளன்று போகி கொண்டாடப்படுகிறது. அந்நாளில், பழையன கழித்து பதியன புகுதல் வழக்கம்.
போகியன்று சில கிராமங்களில் ஒப்பாரி வைக்கும் பழக்கம் உள்ளது. அங்ஙனம் அழுவது எதனால், என்பதனை ஆராய்ந்த வரலாற்று அறிஞர்கள், அந்நாளை புத்தர் இறந்த தினமென்று கண்டறிந்துள்ளனர்.
தைப்பொங்கல்
தை மாத முதல் நாள் பொங்கல் கொண்டாடப்படுகிறது.
மாட்டுப் பொங்கல்
மாட்டுப் பொங்கல் என்பது தைப்பொங்கல் நாளின் மறுநாள் தமிழர்களால் கொண்டாடப்படும் ஒரு பண்டிகை ஆகும். இது பட்டிப் பொங்கல் அல்லது கன்றுப் பொங்கல் எனவும் அழைக்கப்படுகிறது. மக்களின் வாழ்வில் ஒன்றிய பசுவுக்குநன்றி தெரிவிப்பதற்காகவும், பசுக்களில் எல்லாத் தேவர்களும் இருப்பதாலும் பசுக்கலை வணங்கி வழிபடும் நாளாகக் கொண்டாடுகின்றனர்.
காணும் பொங்கல்
காணும் பொங்கல் என்பது பொங்கல் கொண்டாட்டங்களில் நான்காவது நாள் இடம்பெறும் விழா ஆகும். காணும் பொங்கலை கன்னிப் பொங்கல் அல்லதுகணுப் பண்டிகை என்றும் அழைப்பர். உற்றார், உறவினர், நண்பர்களை காணுதல் மற்றும் பெரியோர் ஆசி பெறுதல் என்பன அடங்கும். பல்வேறு விளையாட்டுப் போட்டிகள், பட்டி மன்றம், உரி அடித்தல், வழுக்கு மரம் ஏறுதல் என்று வீர சாகசப் போட்டிகளிலிருந்து சகலமும் இடம் பெறும்.

பொங்க வைக்கும் முறை
தைப்பொங்கலுக்கு சில நாட்களுக்கு முன்னரே கொண்டாட்ட வெடிகள் வெடிக்க தொடங்கி விடும். பொங்கலுக்கு தேவையான பொருட்களை ஆய்தப்படுத்திக் கொள்வர். தமிழீழம் தமிழ்நாடு போன்ற இடங்களில் புதுப்பானை பலர் வாங்குவர். மேற்குநாடுகளில் பொங்கலுக்கு தேவையான அனைத்து பொருட்களும் கொண்ட பொதுகள் விற்பனைக்கு இருக்கும். வசதிபடைத்த பலர் புத்தாடை வாங்குவர்.

பொங்கலன்று அதிகாலை எழுந்து முழுகுவர். வீட்டு முற்றத்தில் கோலம் இட்டு அதன் நடுவில் பானை வைப்பர்.புதுப்பானையில் புது அரிசியிட்டு முற்றத்தில் பொங்க வைப்பார்கள். புதிய பானைக்கு புதிய மஞ்சளைக் காப்பாக அணிவர். புதிய மஞ்சள் கொத்தையும் புதிய கரும்பையும் புதிய காய்கறிகளையும் அன்று பயன்படுத்துவர். முற்றத்திற்கோலமிட்டு தலை வாழையிலையில் நிறைகுடம் வைத்து விளக்கேற்றி கதிரவனை வணங்கி பொங்கலிடத் தொடங்குவர். இந்துத் தமிழர்கள் சாணத்தில் பிள்ளையார் பிடித்தும் வைப்பார்கள். பொங்கல் பொங்கி வரும் வேளையில் குடும்பத் தலைவன், மனைவி மக்களுடன் கூடி நின்று "பொங்கலோ பொங்கல்! பொங்கலோ பொங்கல்!" என்று உரக்கக் கூவி அரிசியை இருகைகளாலும் அள்ளிப் பானையில் இடுவர். தனது முதற் பயனை கதிரவனுக்குப் படைத்துப் பின் குடும்பத்தாருக்கும் சுற்றத்தாருக்கும் கொடுத்த பின்பே தான் நுகர்வான். இது தமிழரின் பண்பாடாக தொன்று தொட்டு உள்ளது என்பர்.

பொங்கலை ஒத்த பிற விழாக்கள்
மேற்குநாடுகளில் பொங்கல் போன்றே ஒரு நன்றி தெரிவிக்கும் நாள் உண்டு. இந்தியாவின் வட மாநிலங்களில் இது மகர சங்கராந்தி எனவும் சங்கராந்தி எனவும் கொண்டாடப்படுகிறது. சூரியன் தனுர் ராசியில் இருந்து மகர ராசியின் நுழைவதன் மூலம் உத்தரயானத்தில் சூரியன் சஞ்சரிக்கும் காலம் துவங்குகிறது. எனவே தான் இதை மகர சங்கராந்தி என அழைக்கின்றனர்.