ஊரையெல்லாம் சிரிக்க வைத்த வடிவேலு, இப்போது தாங்க முடியாத சோகத்தில்!

காமெடி என்றால் இன்று கவுண்டமணிக்குப் பிறகு கொடிகட்டிப் பறப்பவர் வடிவேலுதான்.

மனிதர் திரையில் தோன்றினாலே மனசு லேசாகி சிரிக்க ஆரம்பித்துவிடுவோம். ஒரு வெள்ளந்தியான கிராமத்து மனிதராக திரையில் சேட்டைகள் செய்யும் வடிவேலு, கிட்டத்தட்ட நிஜத்திலும் அதே வெள்ளந்தித்தனத்தோடு இருந்து விட்டார்.

அதன் விளைவு பெரும் நஷ்டத்தில் தவிக்கிறார். கூட இருந்த கூட்டாளி நடிகர்களே வடிவேலுவின் அறியாமையைப் பயன்படுத்தி பல கோடி ரூபாயைச் சுருட்டிக் கொண்டு ஓடியிருக்கிறார்கள்.

இதன் விளைவு இன்று கண்ணீரில் தவிக்கிறார் மனிதர்.

இதற்கு முன்பே கூட இதுபற்றி மீடியாவில் பேசிக் கொண்டார்கள் என்றாலும், வருமான வரித்துறையினர் சமீபத்தில் வடிவேலு வீட்டிலும் அலுவலகத்திலும் சோதனை நடத்தியபோதுதான் இந்த விஷயம் வெளியே தெரிய வந்துள்ளது.
வடிவேலுவைச் சுற்றி எப்போதும் துணை காமெடி நடிகர் பட்டாளம் இருக்கும். அவர்களில் சிலர் நெருங்கிய நண்பர்களாகவும் இருந்தனர். இவர்கள் எல்லோருக்குமே வடிவேலு மூலம் தொடர்ந்து வாய்ப்புகள் வந்தன.

அவர்களில் ஒருவர் சொந்தப் படம் எடுத்த போதுகூட, இலவசமாக நடித்துக் கொடுத்து உதவினாராம் வடிவேலு.

வடிவேலு, தனக்கான சம்பளத்தைக் கூட செக்காக வாங்க மாட்டார். பெரும்பாலும் கேஷ்தான். ஒரு கட்டத்தில் கோடி கோடியாய் சம்பாதித்த பணத்தை எங்கு முதலீடு செய்வது என்று புரியாமல் குழம்பிப் போனார். அப்போதுதான் கூட இருந்த சிலர் குழி பறிக்க வியூகம் வகுத்தனர். ரியல் எஸ்டேட்டில் முதலீடு செய்யுமாறு யோசனை சொன்னார்கள்.

நிலம் வாங்கி போட்டால் ஒரு வருடத்திலேயே விலை ஏறும், நல்ல ஆதாயம் கிடைக்கும் என்று ஆசை வார்த்தை கூறினார்கள். அதை நம்பி வடிவேலுவும் நல்ல இடமாகப் பார்க்கச் சொன்னார்.

மோசடி நடிகர்கள் போலி டாக்குமெண்டுகளை தயார் செய்து அரசு புறம்போக்கு நிலங்களை வடிவேலு பெயருக்கு பத்திரம் பதிவு செய்துள்ளனர். உச்சகட்ட ஏமாற்றுத்தனமாக சுடுகாடு அமைக்க அரசு ஒதுக்கிய நிலத்தையும் வடிவேலுவுக்கு வாங்கி கொடுத்துள்ளனர்.

இந்த நிலங்களுக்கு விலையாக ரூ 7 கோடியை வடிவேலுவிடமிருந்து அபகரித்துள்ளனர்.

சில மாதங்கள் கழித்துதான் உண்மை தெரிந்தது வடிவேலுவுக்கு. அதற்குள் ஏமாற்றியவர்கள் வடிவேலுவிடம் இருந்து பி்ரிந்து போய்விட்டனர். வெளியே சொல்ல முடியாமல் மனதுக்குள் வைத்தே அழுத வடிவேலு, போதும்டா சென்னை என்று மதுரைக்கே போய்விட்டார்.

சமீப காலமாக தனது சோகத்தை தன் தாயிடம் சொல்லி கலங்கிய வடிவேலுவை சமாதானப்படுத்தி, இனி மதுரையிலேயே இருந்து கொள் என்று கூறினாராம் தாயார்.

இதுபற்றி வருமான வரி அதிகாரிகளிடம் கூறிய வடிவேலு, என் நண்பர்களை நான் பெரிதும் நம்பினேன். அவர்கள் தாம்பரத்தை சுற்றி உள்ள பகுதிகளில் நிலம் வாங்கித் தந்தனர். பிறகு விசாரித்தபோது அது போலி டாகுமென்ட் என தெரியவந்தது. பேப்பரை வைத்து ஏமாற்றி விட்டனர் என்றாராம்.

வடிவேலுவைத் தொடர்பு கொண்டு இந்த விவரங்களைக் கேட்டபோது, "உண்மைதான்... என்ன பண்றதுன்னே தெரியல" என்றார்.

"கூட இருக்கும் நண்பர்களாச்சேன்னு குருட்டுத்தனமாக நம்பினேன். அவர்கள் மொத்தமாக மோசம் செய்துவிட்டனர். அவர்கள் போலியாக வாங்கி தந்த நிலத்தில் ஒன்று சுடுகாட்டுக்கு ஒதுக்கப்பட்டது.

இதனால் கடந்த சில மாதங்களாக கடும் மன அழுத்தத்துக்கு உள்ளாகி இருக்கிறேன். கஷ்டப்பட்டு சம்பாதித்த காசுல பெருந் தொகையை இழந்து விட்டேன்.

ஒவ்வொரு வரையும் சிரிக்க வைக்கும் நான் திரைக்கு பின்னால் அழுது கொண்டு இருக்கிறேன். நெருக்கமான நண்பர்கள் துரோகம் செய்தால் அதில் ஏற்படும் வலி தாங்க முடியாதுங்க.

திரையில மட்டுமல்ல, நிஜத்திலும் நான் ஒரு கோமாளின்னு மத்தவங்க தப்பா நினைச்சிடக் கூடாதேன்னுதான் வெளிய சொல்லல... நான் அதிகமா படிக்கல. அதனால சொன்னதையெல்லாம் நம்பிட்டேன்..." என்றார் கண்ணீருடன்.

'அதுக்கெல்லாம் நீ சரிப்பட்டு வர மாட்டே' என்று படத்தில் வடிவேலுவைப் பார்த்து வசனம் பேசியவர்கள் இப்போது நிஜத்திலும், வடிவேலுவை அழ வைத்து வேடிக்கை பார்த்துள்ளது திரையுலகை பரபரப்பில் ஆழ்த்தியுள்ளது.
0 Responses