சூப்பர் ஸ்டார் ரஜினி - இசைப்புயல் ரஹ்மான் சந்திப்பு



இசைப்புயலும், திரைப்புயலும் ஒரே இடத்தில் சந்தித்திருக்கிறார்கள். இந்த சந்திப்பு ரொம்ப ரொம்ப விசேஷமானது. ஏன்? நின்று போயிருந்த 'சுல்தான் தி வாரியர்' படத்தை மீண்டும் துவங்க திட்டமிருப்பதாக அதிகாரபூர்வமான தகவலை அனுப்பியிருக்கிறது


சவுந்தர்யாவின் ஆக்கர் ஸ்டுடியோ. முதலில் இந்த அனிமேஷன் படத்தில் ஆக்ரோஷ ஹீரோவாக வளர்ந்து வந்தார் ரஜினி. இப்போது அதில் ஒரு முக்கியமான மாற்றம். முப்பது நிமிடங்கள் நிஜமான ரஜினியாகவே தோன்றப் போகிறாராம் சூப்பர் ஸ்டார்.

இவருக்கு ஒரு அறிமுக பாடல் இருக்க வேண்டுமல்லவா? அதனால்தான் ஏ.ஆர்.ரஹ்மானை சந்திக்க வந்திருக்கிறார். அசோக் நகரில் இருக்கும் ரஹ்மான் ஸ்டுடியோவுக்கு தனது மகள் சவுந்தர்யாவுடன் வந்தவர், அரை மணி நேரத்திற்கு மேலாக அவருடன் பேசிக் கொண்டிருந்தாராம்.
இந்த பாடலை வழக்கம் போல வைரமுத்துவே எழுதப் போவதாகவும் தகவல். பொதுவாக ஒரு பாடலை உருவாக்கி தர நீண்ட காலம் எடுத்துக் கொள்வார் ரஹ்மான். இந்த படத்திற்கு கூட உடனே பாடல்களை தரவில்லை என்று முன்பு வருத்தத்தில் இருந்தார் ரஜினி. அதையெல்லாம் களைந்து உடனே பாடல் தர வேண்டும் என்பதற்காகதான் இந்த நேரடி சந்திப்பாம்.

சுல்தான் தி வாரியர் படத்தில், அனிமேஷன் ரஜினி தவிர்த்து, இன்னொரு ரஜினியும் உண்டு என ஏற்கெனவே கூறியுள்ளோம். அது நிஜ ரஜினி. குறிப்பிட்ட சில காட்சிகளில் அனிமேஷன் ரஜினியுடன் நிஜ ரஜினியும் வருவதுபோல படத்தில் காட்சிகள் வைக்கப்படுகிறதாம். அதற்கான படப்பிடிப்பு சமீபத்தில் துவங்கியுள்ளது.
இந்த அசல் ரஜினி காட்சிகள் மட்டும் படத்தில் 20 நிமிடங்கள் வருகின்றன.
இந்த இரண்டு ரஜினி தவிர, இன்னொரு ரஜினியும் படத்தில் இடம்பெறக்கூடும் என்கிறது ஆக்கர் யூனிட்.
அது என்ன வேடம்?
“அதான் படத்தின் முக்கியமான சஸ்பென்ஸ்.. படம் வரட்டும் பாருங்க. முக்கியமான இன்னொரு விஷயம்… சுல்தான் தி வாரியர் எந்திரனுக்குப் பிறகுதான் ரிலீஸ். அதில் எந்த மாற்றமும் இல்லை. தீபாவளிக்குள் நிச்சயம் வரும்” என்கிறார் சௌந்தர்யா.
சௌந்தர்யாவின் திருமணத்துக்கு முன் படம் தொடர்பான அனைத்து வேலைகளும் முடித்துவிட வேண்டும் என்பது அப்பாவின் அன்பான கட்டளையாம்!

விஜய் படத்தில் ரா‌ஜ்கிரண்



விஜய் பலருடன் இணைந்து நடித்திருக்கிறார். ஆனாலும் ரா‌ஜ்கிரணுடன் இணைந்து நடித்ததில்லை. முதல் முறையாக ஒரு படத்தில் இவர்கள் இணைந்து நடிக்கின்றனர்.
விஜய்யின் 51வது படத்தை சித்திக் இயக்குகிறார் என்பது ஏறக்குறைய முடிவாகிவிட்டது. வித்யாசாகர் இசையில் மூன்று பாடல்கள் கம்போஸாகிவிட்டன. இந்த மூன்று பாடல்களுக்கும் வ‌ரிகள் எழுதியவர் யுகபாரதி.
சித்திக்கின் சமீபத்திய மலையாளப் படம் பாடிகா‌ர்ட். திலீப், நயன்தாரா நடித்த இந்தப் படத்தின் கதையை விஜய்க்காக சிறிது மாற்றியிருக்கிறார் சித்திக். நயன்தாராவின் வேடத்தில் நடிப்பவர் அசின். அசினின் தந்தையாக நடிக்க ரா‌ஜ்கிரணை தேர்வு செய்துள்ளனர். விஜய், ரா‌ஜ்கிரண் இணைவது இதுவே முதல் முறை.

சுறாவைத் தொடர்ந்து இந்தப் படத்திற்கும் ஏகம்பரமே ஒளிப்பதிவு செய்கிறார்.

விஜய்-சூர்யா நேரடி போட்டி !


மே மாதம் திரைக்கு வரும் என்று எதிர்பார்த்திருந்த சுறா, நாலு காய் பாய்ச்சலில் முன்பாகவே வரப்போகிறது. இப்படத்தை ஏப்ரல் 14 ந் தேதி ரிலீஸ் செய்யலாம் என்ற முடிவுக்கு வந்திருக்கிறது சன்.
இப்படி அஸ்திரத்தை ஏவுவார்கள் என்பதை கொஞ்சம் கூட எதிர்பார்க்கவில்லையாம் சிங்கம்.
சாண் ஏறினால் சாண் சறுக்குகிற நிலையில்தான் இருந்தார் விஜய். சமீபத்தில் வெளிவந்த அவரது படங்கள் இழுத்துக்கோ பறிச்சிக்கோ நிலையில்தான் வசூலை சந்தித்தது. இனிமேல் வைக்கிற ஒவ்வொரு ஸ்டெப்பும் அதிரடியாக இருக்கணும் என்று முடிவெடுத்த விஜய், சுறாவின் றெக்கையை சாணை பிடித்துதான் வைத்திருக்கிறாராம். படத்தின் அத்தனை காட்சிகளும் செம ஷார்ப், பொழுதுபோக்கு அம்சங்களுக்கும் கியாரண்டி என்கிறார்கள் கோடம்பாக்கத்தில்.

தனிக்காட்டு உறுமலாக இருக்கும் என்று நேற்றுவரை நம்பிக் கொண்டிருந்த சிங்கம் டீமை இந்த அரசல் புரசலான செய்தி அம்பு போல் தாக்கியிருக்கும் என்பதை சொல்லத்தான் வேண்டுமா?

தீராத விளையாட்டுப் பிள்ளை

நடிகர்கள் - விஷால், நீது சந்திரா, தனுஸ்ரீ தத்தா, சாரா ஜென், பிரகாஷ் ராஜ், சந்தானம், சத்யன், மயில்சாமி
இசை - யுவன் ஷங்கர் ராஜா
இயக்கம் - திரு
தயாரிப்பு - விக்ரம் கிருஷ்ணா

காதலின் ஆழத்தை அறிந்து கொள்ள திட்டம் போடும் ஒரு இளைஞனின் கதை.
எதிலும் சிறந்ததை தேர்ந்தெடுக்கும் வழக்கம் கொண்ட விஷால், தனக்கு வரப்போகும் மனைவியையும் தன் விருப்பத்துக்கு தேர்வு செய்ய நினைக்கிறார். அதற்காக மூன்று பெண்களை தேர்ந்தெடுத்து, காதலித்து அவர்களில் ஒருவரை மனைவியாக்க நினைக்கிறார். விஷாலின் இந்த விளையாட்டு ஒரு கட்டத்தில் விபரீதமாகிறது. பின்பு அதிலிருந்து அவர் எப்படி தப்பிக்கிறார் என்பது இறுதிக்காட்சி.
கடைக்காரரிடம் ஒரு பாக்கெட் பேனாவை வாங்கி அதில் உள்ள அனைத்தையும் எழுதிப்பார்த்து அதில் ஒன்றை தேர்வு செய்யும், விஷாலின் கதாபாத்திரத்தை முதலிலேயே ஆணித்தரமாகச் சொல்லிவிடுவதிலிருந்து தொடங்குகிறது நகைச்சுவை கலாட்டா. நண்பர்கள் சகிதம் தன் காதல் வேட்டையை ஆரம்பிக்கிறார் விஷால்.
"குடியிருக்க ஒரு வீடு பார்த்தாக் கூட, நாலு வீடு பார்த்து பிடிச்சதுல குடிபோறோம். நம்ம வாழ்க்கையில குடிவரப்போற மனைவியை மட்டும் பார்த்தவுடனேயே தீர்மானிக்கிறது எப்படி சரியாகும்?" என்று தனது தேடலுக்கு நியாயம் கற்பிக்கும்போதும், "காதல்ங்கறது வீடு பாக்குற மாதிரி சாதாரண விஷயமில்லை" என்று உணர்ந்து வருந்தும்போதும் புது விஷாலைப் பார்க்க முடிகிறது. ஆனாலும் கதாநாயகன் ஆன பிறகு, சண்டை காட்சிக்கு பயந்தா முடியுமா?" என்று சண்டைக் காட்சிகளில் அதே ஆக்ரோஷத்துடன் நிமிர்ந்து நிற்கிறார்.
காதலில் தோற்று மற்றுமொரு நல்ல காதலனை தேடிக் கொண்டிருக்கும் கோடீஸ்வரி நீது சந்திரா, ஆண் இனத்தையே பிடிக்காத தனுஸ்ரீ தத்தா, ஒருவனையே காதலித்து அவனையே மணந்து கொள்ள நினைக்கும் நடுத்தர குடும்பத்து பெண் சாரா ஜென். இவர்கள் விஷாலின் சாய்ஸ்சுக்குள் வரும்போது நகைச்சுவையுடன் கவர்ச்சியும் சேர்ந்து கொள்ள, வண்ணமயமாகிறது படம்.

விஷாலின் நண்பர்களாக வரும் சந்தானம், சத்யன், மயில்சாமி ஆகியோர் கிடைக்கிற சந்திலெல்லாம் சிரிக்க வைக்கிறார்கள். அதிலும் சந்தானம் அடிக்கிற நக்கல் ஒவ்வொன்றும் காமெடி ரவுசு. குறிப்பாக "ஒரே ஆளை காதலித்து அவனையே கல்யாணம் பண்ணிக்கணுமாம். நல்ல குடும்பத்துல பிறந்த பெண் பேசுற பேச்சா இது" என்ற வசனம்!
நாயகிகளில் நீது சந்திராவுக்குதான் நடிக்க வாய்ப்பு. சேலையில் தனுஸ்ரீ தத்தா கொள்ளை அழகு. விஷால் தேர்வு செய்யும் சாராதான் இந்த மூவரில் சுமார். அவரது பாலினும் தூய காதல் நம்பும்படி இல்லை. சாராவை திருமணத்துக்கு சம்மதிக்க வைக்க விஷால் போடும் இறுதிக்காட்சி நாடகமும், சினேகா என்ட்ரியும் புளித்துப் போன, அதேசமயம் கலகலப்பான முடிவு.
விஷாலின் த்ரீ இன் ஒன் காதல் நீது சந்திராவுக்கு தெரிந்த பிறகு திரைக்கதையில் ஜெட் வேகம். நீதுவின் திட்டப்படி சாரா ஜென் விஷாலின் வீட்டிற்கே வந்து பால் காய்ச்சுவதும், தனுஸ்ரீயின் அண்ணன் பிரகாஷ்ராஜின் அதிரடி பிரவேசமும் ஆஹா போட வைக்கும் காட்சிகள்.
திரைக்கதையில் வரும் சின்னச் சின்ன டுவிஸ்டுகள் காட்சிகளை பரபரப்பாக நகர்த்துகின்றன. அறுவைக் காட்சிகள் எவை என்று இயக்குனர் திருவுக்கு நன்றாக தெரிந்திருக்கிறது போலும்! அதான் சந்தானத்தை வைத்து அந்தக் காட்சிகளை நக்கல் அடிப்பதன் மூலம் சமாளிக்கிறார். இயக்குனரின் இந்தப் புரிதல்தான் படத்தை காப்பாற்றுகிறது.
யுவன் ஷங்கர் ராஜா இசையில் "என் ஜன்னல் வந்த" பாடல் தாலாட்டு! மற்ற பாடல்கள் கேட்கும் ரகம். படத்தின் சிறப்பம்சம் அரவிந்த் கிருஷ்ணாவின் ஒளிப்பதிவு! காட்சிகள், பாடல்கள் அனைத்திலும் கேமரா கோணமும், லைட்டிங்கும் கண்களுக்கு விருந்தாக அமைந்திருக்கிறது!
தீராத விளையாட்டுப் பிள்ளையை ரசிக்கலாம்!

பாடகர்களாகும் நடிகர், நடிகைகள்

தமிழ் திரையுலகில் நடிகர், நடிகைகளை பின்னணி பாடகர்களாகும் மோகம் பரவுகிறது. ஏற்கனவே ரஜினி மன்னன் படத்தில் “அடிக்குது குளிரு” என்ற பாடலை பாடினார். அதுபோல் கமலும் நிறைய படங்களில் பாடி இருக்கிறார்.
விஜய் பத்ரி படத்தில் “என்னோட லைலா வர்றாளே ஸ்டைலா” பாட்டையும், விஷ்ணு படத்தில் “தொட்ட பெட்ட ரோட்டு மேல முட்டை பரோட்டா” பாடலையும் பாடினார்.


சமீபத்தில் ரிலீசான கந்தசாமி படத்தில் விக்ரம் அனைத்து பாடல்களையும் சொந்த குரலில் பாடி பாடகராக அறிமுகமானார். செல்வராகவனின் ஆயிரத்தில் ஒருவன் படத்தில் தனுஷ் “உன்மேல ஆசைதான்” என்ற பாட்டை பாடி பாடகராக அடையாளம் காட்டினார். நடிகை மம்தா மோகன்தாஸ் வில்லு படத்தில் “டாடி மம்மி வீட்டில் இல்ல தடை போட யாரும் இல்ல விளையாடி பார்ப்போம் தில்லானா” என்ற பாட்டை பாடினார். இப்பாடல் பட்டி தொட்டியொங்கும் ஒலித்து இளசுகளை ஆட்டம் போட வைத்தது. சந்தோஷ் சுப்பிரமணியம் படத்தில் “அடடா அடடா அடடா என்னை ஏதோ செய்கிறாய்” என்ற பாட்டை நடிகர் சித்தார்த் பாடினார்.
டி.ஜி. கஜேந்திரன் இயக்கத்தில் விரைவில் ரிலீசாக உள்ள “மகனே என் மருமகனே” படத்தில் குஷ்பு ஒரு பாடலை பாடியுள்ளார். “தம்பிக்கு இந்த ஊரு” படத்தில் “கூத்தா டூ மச்சி” என்ற பாடலை பரத் பாடிஉள்ளார். “குரு சிஷ்யன்” படத்தில் சத்யராஜ், சுந்தர் .சி இணைந்து ஒரு பாடலை பாடி உள்ளனர்.

நடிகர், நடிகைகள் பாடகர்களாவதால் பின்னணி பாடகர், பாடகிகள் அதிர்ச்சியில் உள்ளனர். தங்கள் வாய்ப்புகள் பறிபோய் விடுமோ என்று தவிக்கிறார்கள்.

இந்தி '3 இடியட்ஸ்' படம் ரீமேக் , அமீர்கான் வேடத்தில் விஜய்


'3 இடியட்ஸ்' படத்தை தமிழில் ரீமேக் செய்ய ஏற்பாடுகள் நடக்கின்றன. ரீமேக் உரிமையை ஜெமினி பிலிம்சர்க்கியூட் நிறுவனம் பெரும் தொகை கொடுத்து வாங்கி இருக்கிறது.

இப்படத்தில் நடிக்க முன்னணி தமிழ் ஹீரோக்கள் பலர் ஆர்வம் காட்டுகிறார்கள். பாலாவின் “அவன் இவன்” படத்தில் விஷால், ஆர்யா என இரு கதாநாயகர்கள் சேர்ந்து நடிக்கின்றனர்.

அதுபோல் '3 இடியட்ஸ்' ரீமேக்கிலும் மூன்று கதாநாயகர்களில் ஒருவராக நடிக்க பலர் விரும்புகிறார்கள்.

அமீர்கான் வேடத்தில் விஜய் நடிப்பார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.

மற்ற இரு ஹீரோக்கள் மற்றும் கதாநாயகி பரிசீலனையில் உள்ளனர். விஷ்ணுவர்த்தன் இயக்குவார் என்று கூறப்படுகிறது.