தீராத விளையாட்டுப் பிள்ளை

நடிகர்கள் - விஷால், நீது சந்திரா, தனுஸ்ரீ தத்தா, சாரா ஜென், பிரகாஷ் ராஜ், சந்தானம், சத்யன், மயில்சாமி
இசை - யுவன் ஷங்கர் ராஜா
இயக்கம் - திரு
தயாரிப்பு - விக்ரம் கிருஷ்ணா

காதலின் ஆழத்தை அறிந்து கொள்ள திட்டம் போடும் ஒரு இளைஞனின் கதை.
எதிலும் சிறந்ததை தேர்ந்தெடுக்கும் வழக்கம் கொண்ட விஷால், தனக்கு வரப்போகும் மனைவியையும் தன் விருப்பத்துக்கு தேர்வு செய்ய நினைக்கிறார். அதற்காக மூன்று பெண்களை தேர்ந்தெடுத்து, காதலித்து அவர்களில் ஒருவரை மனைவியாக்க நினைக்கிறார். விஷாலின் இந்த விளையாட்டு ஒரு கட்டத்தில் விபரீதமாகிறது. பின்பு அதிலிருந்து அவர் எப்படி தப்பிக்கிறார் என்பது இறுதிக்காட்சி.
கடைக்காரரிடம் ஒரு பாக்கெட் பேனாவை வாங்கி அதில் உள்ள அனைத்தையும் எழுதிப்பார்த்து அதில் ஒன்றை தேர்வு செய்யும், விஷாலின் கதாபாத்திரத்தை முதலிலேயே ஆணித்தரமாகச் சொல்லிவிடுவதிலிருந்து தொடங்குகிறது நகைச்சுவை கலாட்டா. நண்பர்கள் சகிதம் தன் காதல் வேட்டையை ஆரம்பிக்கிறார் விஷால்.
"குடியிருக்க ஒரு வீடு பார்த்தாக் கூட, நாலு வீடு பார்த்து பிடிச்சதுல குடிபோறோம். நம்ம வாழ்க்கையில குடிவரப்போற மனைவியை மட்டும் பார்த்தவுடனேயே தீர்மானிக்கிறது எப்படி சரியாகும்?" என்று தனது தேடலுக்கு நியாயம் கற்பிக்கும்போதும், "காதல்ங்கறது வீடு பாக்குற மாதிரி சாதாரண விஷயமில்லை" என்று உணர்ந்து வருந்தும்போதும் புது விஷாலைப் பார்க்க முடிகிறது. ஆனாலும் கதாநாயகன் ஆன பிறகு, சண்டை காட்சிக்கு பயந்தா முடியுமா?" என்று சண்டைக் காட்சிகளில் அதே ஆக்ரோஷத்துடன் நிமிர்ந்து நிற்கிறார்.
காதலில் தோற்று மற்றுமொரு நல்ல காதலனை தேடிக் கொண்டிருக்கும் கோடீஸ்வரி நீது சந்திரா, ஆண் இனத்தையே பிடிக்காத தனுஸ்ரீ தத்தா, ஒருவனையே காதலித்து அவனையே மணந்து கொள்ள நினைக்கும் நடுத்தர குடும்பத்து பெண் சாரா ஜென். இவர்கள் விஷாலின் சாய்ஸ்சுக்குள் வரும்போது நகைச்சுவையுடன் கவர்ச்சியும் சேர்ந்து கொள்ள, வண்ணமயமாகிறது படம்.

விஷாலின் நண்பர்களாக வரும் சந்தானம், சத்யன், மயில்சாமி ஆகியோர் கிடைக்கிற சந்திலெல்லாம் சிரிக்க வைக்கிறார்கள். அதிலும் சந்தானம் அடிக்கிற நக்கல் ஒவ்வொன்றும் காமெடி ரவுசு. குறிப்பாக "ஒரே ஆளை காதலித்து அவனையே கல்யாணம் பண்ணிக்கணுமாம். நல்ல குடும்பத்துல பிறந்த பெண் பேசுற பேச்சா இது" என்ற வசனம்!
நாயகிகளில் நீது சந்திராவுக்குதான் நடிக்க வாய்ப்பு. சேலையில் தனுஸ்ரீ தத்தா கொள்ளை அழகு. விஷால் தேர்வு செய்யும் சாராதான் இந்த மூவரில் சுமார். அவரது பாலினும் தூய காதல் நம்பும்படி இல்லை. சாராவை திருமணத்துக்கு சம்மதிக்க வைக்க விஷால் போடும் இறுதிக்காட்சி நாடகமும், சினேகா என்ட்ரியும் புளித்துப் போன, அதேசமயம் கலகலப்பான முடிவு.
விஷாலின் த்ரீ இன் ஒன் காதல் நீது சந்திராவுக்கு தெரிந்த பிறகு திரைக்கதையில் ஜெட் வேகம். நீதுவின் திட்டப்படி சாரா ஜென் விஷாலின் வீட்டிற்கே வந்து பால் காய்ச்சுவதும், தனுஸ்ரீயின் அண்ணன் பிரகாஷ்ராஜின் அதிரடி பிரவேசமும் ஆஹா போட வைக்கும் காட்சிகள்.
திரைக்கதையில் வரும் சின்னச் சின்ன டுவிஸ்டுகள் காட்சிகளை பரபரப்பாக நகர்த்துகின்றன. அறுவைக் காட்சிகள் எவை என்று இயக்குனர் திருவுக்கு நன்றாக தெரிந்திருக்கிறது போலும்! அதான் சந்தானத்தை வைத்து அந்தக் காட்சிகளை நக்கல் அடிப்பதன் மூலம் சமாளிக்கிறார். இயக்குனரின் இந்தப் புரிதல்தான் படத்தை காப்பாற்றுகிறது.
யுவன் ஷங்கர் ராஜா இசையில் "என் ஜன்னல் வந்த" பாடல் தாலாட்டு! மற்ற பாடல்கள் கேட்கும் ரகம். படத்தின் சிறப்பம்சம் அரவிந்த் கிருஷ்ணாவின் ஒளிப்பதிவு! காட்சிகள், பாடல்கள் அனைத்திலும் கேமரா கோணமும், லைட்டிங்கும் கண்களுக்கு விருந்தாக அமைந்திருக்கிறது!
தீராத விளையாட்டுப் பிள்ளையை ரசிக்கலாம்!
0 Responses